வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பட்டிற்காக பலநோக்கு மண்டபம்

224 0
வட மாகாணத்திலே நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் அவர்களது தொழிலில் அவர்கள் எதிர் கொள்ளும் இடர்களில் இயலுமானவற்றை ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்து கொடுக்கும் வண்ணம் திறம்பட இயங்குகின்ற பல சங்கங்களில் ஒன்றான வன்னேரிகுளம் மீனவ சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக ரூபா 2.84 மில்லியன் பெறுமதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பல நோக்கு கட்டிடம் வட மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் 04.07.2017 அன்று வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

குறித்த கட்டிடமானது வட மாகாண மீன்பிடி அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. சி. சத்தியசீலன் அவர்களும், அமைச்சின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுரேந்திரன் அவர்களும், தேசிய நீர் வாழ் உயிரினங்கள் அதிகாரசபையின் மாவட்ட விரிவாக்கல் அதிகாரி திரு. சலிவன் அவர்களும், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அமைச்சர் அவர்கள் குறிப்பிடுகையில் மிக நீண்ட காலமாக இம் மக்கள் தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஓர் இடம் இன்றியும், சங்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு, சங்க ஆவணங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு இடம் இன்றியும் மற்றும் தொழிலின் போது ஓய்வு எடுப்பதற்கு ஓர் வசதியான இடம் இல்லாமலும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டனர்.
அவற்றிற்கெல்லாம் இன்று இந்த பல நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதன் மூலம் தீர்வு கிடைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன் வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகத்தினரின் அயராத அர்ப்பணிப்புடனான சேவை இம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் இவ்வாறான உதவிகள் கிடைப்பதற்கும் காரணமாக அமைகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இறுதியாக நிலையான அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதற்கு இவ்வாறு கிடைக்கின்ற உதவித்திட்டங்களை உச்ச வலுவுடன் பயன்படுத்துவதுடன் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment