காஷ்மீர் விவகாரம் இடம் பெறாத பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: பாக். வெளியுறவு

222 0

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம் பெறும் வரை, எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவது இல்லை என பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் “காஷ்மீர் பத்திரிக்கையாளர்கள் களம்” என்ற அமைப்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடையே அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகராக உள்ள சர்தாஜ் அஸீஸ் இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்த நிலையை விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் ,”காஷ்மீர் விவகாரம் இல்லாமல் இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வருவது ஒருபக்கச் சார்பின் வெளிப்பாடு. இதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளாது. ஐ.நா சபையின் தலைவர் அண்டோனியா கட்ரஸ் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையில் தனது கவலையை தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல் இந்தியாவுடனான எல்லா விவகாரங்களையும் முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகவே உள்ளது. ஆனால், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைக்கும் செயல்களில் இந்தியா ஈடுபடுகிறது” எனவும் சர்தாஜ் அஸீஸ் கூறினார்.

காஷ்மீரில் எந்த தவறும் இல்லையெனில் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது எதற்காக?, ஊடகங்களை அங்கு இருட்டடிப்பு செய்யும் வேலைகளில் அரசு இறங்கியிருப்பது எதற்காக? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார். காஷ்மீர் நிலமையை கண்காணிக்க ஐ.நா, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கும் அஸீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a comment