கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்காது: ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்

217 0

கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதால் நீர்மட்டம் குறையவில்லை, நீரும் பாதிக்கப்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன குழாயில் திடீர் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஓ.என். ஜி.சி. நிறுவன தலைமை பொதுமேலாளர் (காவிரி படுகை) டி.ராஜேந்திரன், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதி செயல் இயக்குனர் குல்பீர்சிங் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி படுகையில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. குத்தாலம் பகுதியில் 2008-ம் ஆண்டு தோண்டப்பட்ட 28 ஆழ்துளை கிணறுகள் உள்பட 33 ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது.கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய் குழாயில் இருந்து 30-ந் தேதி காலை ஹைட்ரோ கார்பன் கசிவு ஏற்பட்டது. தகவல் கிடைத்து அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சீரமைப்பு பணி, பொதுமக்கள் தடுத்ததால் காவல் துறையினரின் உதவியுடன் அன்று மாலை தான் செய்ய முடிந்தது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கசிவு காரணமாக 15 சென்ட் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நஷ்டஈடு வழங்கப்படும்.

2008-ம் ஆண்டில் இருந்து முதல் முறையாக இப்போது தான் கசிவு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற கசிவு ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த கசிவு எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்து மும்பையில் உள்ள ஆய்வு கூடம் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் 2 மாதத்தில் கிடைக்கும். அதன்பின்னரே கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவரும்.

எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது என்று ஓ.என்ஜி.சி. மீது தொடர்ந்து புகார் சுமத்தப்பட்டு வருகிறது. இதனை ஏற்க முடியாது. காரணம் தமிழக அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் நிலத்தடி நீரை ஆய்வு செய்ததில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறையவில்லை, தண்ணீரும் பாதிக்கப்படவில்லை என்று 2014-ம் ஆண்டு சான்று அளித்து தெளிவுபடுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

பொதுவாக எண்ணெய், இயற்கை எரிவாயு திட்டபணிகள் அனைத்தும் 2 ஆயிரம் மீட்டருக்கு கீழே நடப்பதால் குடிநீர் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. நடப்பாண்டு காவிரி படுகையில் இருந்து 150 டன் எண்ணெய் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. எந்த பணியாக இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதியும், குடிநீர், நிலத்தடிநீர் பாதிக்காத வகையிலும் தான் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a comment