காலாண்டு அமைச்சர்களே! கரைந்து போய்விடாதீர்கள்!

23623 0

வடக்கின் விதியோ? சதியோ?  ஊழல் என ஊழித் தாண்டவம் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று விட்டார்கள்.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன்  சமூகசேவைகள் மற்றும் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அமைச்சராகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்த கந்தையா சர்வேஸ்வரன்   கல்வி , விளையாட்டுத்துறை  அமைச்சராகவும் வடமாகாண ஆளுநர் ரெயினொல்கூரே முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

கல்வி, விவசாய அமைச்சர்கள்  விலக்கப்பட்டார்கள். இவ் இரு அமைச்சுகளுக்கும் உடனடியாக மாற்று அமைச்சர்களை தெரிவு செய்ய முடியாத  இறுக்கத்திற்குள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  தடுமாறியதன் காரணம் என்ன?
 
யாரை சமாளிப்பதற்காக புதிதாக ஒர் அமைச்சை உருவாக்கி அனந்திக்கு அமைச்சர் பதவி?
 
விவசாய அமைச்சை முதலமைச்சர் தன்னகத்தே வைத்திருப்பதன் காரணம்?

இவற்றுக்கு  காரணம் வடக்கு முதல்வர் கடிவாளம் இடப்பட்டுள்ளார் என்பதே.

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமக்கு வழங்கப்பட்ட இவ் வாய்ப்பை புதிய அமைச்சர்களான கந்தையா சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் மிகச் சரியாக காலத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

முத்தாக மூன்று மாதங்கள்  ஒய்வின்றி உழையுங்கள்!  களியாட்ட விழாக்களில் காலத்தை விரயமாக்கி,  மலர்மாலைகளில் மதியை தொலைக்காதீர்கள்! களப் பயணமே கனதியான பணி! மக்களே உங்கள் மூலதனம்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா  தீர்மானத்தின் போது மக்களின் கொந்தளிப்பு அலையின் தாக்கத்தை பார்த்தீர்கள் தானே!

மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. உங்கள் மக்களுக்காக உழையுங்கள்!

உண்மையாக இருங்கள்! வெறும் கருத்துகளால் மட்டும் கதிரையில் இருந்தபடி கடமை செய்யலாம் என நினைக்காதீர்கள். அப்படியானவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

தயவு செய்து காலாண்டுக்குள் களியாட்டங்களில் கரைந்து போகமாமல் கடமையால் உங்கள் கனதியை நிலை நாட்டுங்கள்.

Leave a comment