ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் 20 லிட்டர் குடிநீர் கேன் விலை ரூ.45 ஆக உயர்வு

219 0

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கேன்கள் கூடுதலாக ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன்கள் குறைந்தது 40 முதல் 45 வரை விற்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நேற்று (1-ந்தேதி) முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட குடிநீர் கேன்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் 15 லட்சம் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக வறட்சி, தண்ணீர் தட்டுபாடு காரணமாக குடிநீர் கேன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட குடிநீர் கேன்கள் ரூ.30, 35 என விற்பனை செய்யப்பட்டது.

தற்போது 18 சதவீதம் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதையொட்டி மேலும் குடிநீர் விலை உயர்ந்துள்ளது. ஒரு கேனுக்கு ரூ.10 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 20 லிட்டர் குடிநீர் கேன்கள் சென்னையில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

உயர்தர பிராண்டு கம்பெனிகளின் குடிநீர் கேன்கள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உயர்வால் பிராண்டு கம்பெனிகளும் ரூ.15 வரை விலையை உயர்த்தி உள்ளன.

இதுகுறித்து குடிநீர் கேன் விற்பனை செய்யும் வியாபாரி லட்சுமணன் கூறியதாவது:-

சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகள், அனைத்தும் வறண்டு விட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக வீதி வீதியாக அலைந்து வருகிறார்கள். தற்போது தனியார் குடிநீர் கம்பெனிகள் மூலம் வழங்கப்படும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை வாங்கி சமாளித்து வருகிறார்கள்.

18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கேன்கள் கூடுதலாக ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன்கள் குறைந்தது 40 முதல் 45 வரை விற்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தண்ணீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு மீண்டும் கவலை ஏற்படுத்தி உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பேக்கிங் தண்ணீருக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

Leave a comment