தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு தடை!

339 0

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற வக்கீல் சங்கத்தின் தலைவராக இருப்பவர் மூத்த வக்கீல் விஜயநாராயணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொழில் தாவா வழக்குகளுக்கான தீர்ப்பாயம், கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் உள்பட மொத்தம் 27 தீர்ப்பாயங்கள் இருந்தன. இதில், 8 தீர்ப்பாயங்களை இழுத்து மூடிவிட்டு, அதை மீதமுள்ள 19 தீர்ப்பாயங்களுடன் இணைத்து மத்திய அரசு சட்டமசோதாவை தாக்கல் செய்தது. இதில் நிதி தொடர்பான தீர்ப்பாயங்களும் உள்ளன.

நிதி தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டம் உருவாக்கும்போது, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதை தாக்கல் செய்து, ஒப்புதல் பெறவேண்டும். குறிப்பாக டெல்லி மேல்-சபையில் ஒப்புதலை பெறவேண்டும். ஆனால், மத்திய அரசு மக்களவையில் மட்டும் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்து, மார்ச் 22-ந் தேதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்பின்னர், இந்த சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி கடந்த மார்ச் 31-ந் தேதி ஒப்புதலும் அளித்து விட்டார்.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.

நிதி தொடர்பான சட்டமசோதாவுக்கு டெல்லி மேல்- சபையில் ஒப்புதல் பெறாமல், சட்டமாக்கப்பட்டுள்ளதால், இதற்கு தடைவிதிக்க வேண்டும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி வி.பவானி சுப்ராயன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a comment