ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – மு.க.ஸ்டாலின்

999 0

சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான விழாவை 1-ந் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். ஒரு வருடம் தொடர்ந்து பராமரிப்பவருக்கு ‘பசுமை பாதுகாவலர்’ விருதும் வழங்கப்பட உள்ளது.

தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மரம் வளர்த்தால் தான் நாடு செழுமையடையும், போதிய மழை பெய்யும், மக்களும் வளமாக இருக்க முடியும் எனும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் கூற்றினை ஏற்று சைதாப்பேட்டை தொகுதியில் வசிக்கும் அனைவரும் பங்கேற்கும் வகையில் அவரவர் பிறந்தநாளின் போது அவரவர் வசிக்கும் பகுதியில் நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை, பாதுகாப்பு வளையத்துடன் நட்டுத்தரும் சிறப்புத் திட்டம் ஜூலை 1-ல் தொடங்குகிறது.

ஒரு நாடு 33 சதவீத வனப்பரப்பு கொண்டிருக்க வேண்டிய நிலையில் தமிழகத்தில் 17.5 சதவீதமே, வனப்பரப்பு உள்ளது. சென்னையில் 6.5 சதவீதமே இருந்த பசுமைப் பகுதி சமீபத்திய ‘வார்தா’ புயலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்த நிலையில் 4.5 சதவீதமாக குறைந்து விட்டது.

உலகம் வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சென்னையில் பசுமையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், மேற்கண்ட சிறப்புத் திட்டத்தை ஜூலை 1-ந் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வில் ‘எக்ஸ்னோரா’ நிறுவனர் எம்.பி.நிர்மல், மரவங்கி அமைப்பின் நிறுவனர் முல்லைவனம், நடிகர்கள் மயில்சாமி, பாஸ்கர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

மரம் வளர்ப்பில் மக்களை ஆர்வத்தோடு இணைக்கும் வகையிலும், சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் இத்திட்டத்தில் பங்கேற்க செய்திடும் வகையிலும், அவரவர் பிறந்தநாளில், அவரவர் பெயரில் அவரவர் வீட்டருகில் நன்கு வளர்ந்த மரக்கன்று, பாதுகாப்பு வளையத்துடன் அமைத்துத் தரும் திட்டம் வரும் ஜூலை 1-ல் தொடங்கி தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அதிக உறுதித்தன்மை மிக்க வேப்பமரம், புங்கை, பூவரசு, அத்தி, நாவல் போன்ற பல்வேறு வகையான மர வகைகள் நடப்படும். அவற்றை ஒரு வருட காலம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு ‘பசுமை பாதுகாவலர்’ விருதுகள் வழங்கப்படும். இத்திட்டத்தினைத் தொடங்கியதில் இருந்து ஒரு வருட காலத்துக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை 9566209124, 9566209125 என்ற செல்போன் எண்களிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டால் அவர்களிடம் உறுதிமொழி படிவங்கள் பெற்றுக்கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதியில் மரக்கன்று நட்டுத்தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment