மதுரையிலும் நினைவேந்தலுக்கு தடை. பாஜக பினாமி தமிழக அரசின் தொடரும் துரோகம்.

708 0

சர்வதேச சித்ரவதைகளுக்கு எதிரான தினமான ஜூன் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் மே பதினேழு இயக்கம் சார்பில் மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் ஒன்று கூடும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வந்திருக்கிறோம்.

இந்த ஆண்டு மெரீனாவில் நினைவேந்தலைத் தடுத்ததைப் போல மதுரையிலும் நினைவேந்தல் நிகழ்விற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து தடை போட்டது தமிழக அரசின் காவல் துறை.

முதலமைச்சர் உள்ளிட்ட அதிமுகவின் சில் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்னும் சில தினங்களுக்கு அங்கு நடக்க இருப்பதால் நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது எனக் கூறினர். மே பதினேழு இயக்கத் தோழர்கள் சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்கள் என செய்த கடின உழைப்பினை ஒரே நாளில் அற்பக் காரணத்தை சொல்லி வீணடித்தது தமிழக அரசின் காவல் துறை. ரம்ஜான் நேரத்தில் மாட்டுக்கறி தடை அறிவிப்பை வெளியிட்டு, இசுலாமியர்கள் மீது வெறுப்பினை வளர்க்கும் அரசு, நினைவேந்தலைத் தடுக்க ரம்ஜானை காரணம் காட்டுகிறது. 15 நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதிக் கடிதத்திற்கு நிகவின் முந்தினம் அனுமதியை மறுக்கிறார்கள்.

இதே போன்று கடந்த வாரம் தோழர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தினைக் கண்டித்து தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் தேனி உத்தமபாளையத்தில் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அனுமதி மறுத்து தடுத்திருக்கிறார்கள். இது தொடர் நடவடிக்கையாகி வருகிறது. ஜனநாயகக் குரல்கள் பேசுவதற்கான வெளி தமிழகத்தில் மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை நிரப்பியுள்ள எடுபிடி ஆட்கள் பாஜகவின் பினாமியாக மாறி, ஆரிய இனவெறிக்கு தமிழகத்தை பலிகொடுத்து வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் கூட்டம் நடத்த அறிவித்திருந்த இடத்தில் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தியது காவல்துறை. தனியார் அரங்கில் ஏற்பாடு செய்தாலும் அரங்க உரிமையாளர்களை மிரட்டுவது என்பதை தமிழக காவல்துறை கடந்த சில காலமாக தொடர்ந்து செய்து வருகிறது.

இந்த அடக்குமுறைகளைத் தாண்டி அரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்து நினைவேந்தல் நிகழ்வு அதே தேதியில் நடத்தப்பட்டது. ஏராளமானோர் நினைவேந்தலில் பங்கெடுத்து தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்க உறுதியேற்றனர்.

பங்கேற்ற அமைப்புகள்:
1.தமிழ்ப்புலிகள் கட்சி
2.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3.தந்தை பெரியார் திராவிடர் கழகம்
4.திராவிடர் விடுதலைக் கழகம்
5.புரட்சிக் கவிஞர் பேரவை
6.நாணல் நண்பர்கள் இயக்கம்
7.தமிழ் தமிழர் இயக்கம்
8.மருது மக்கள் இயக்கம்
9.தமிழர் தேசிய முன்னணி
10.மதுரை இலக்கிய மன்றம்
11.சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
12.சிறைப் புலிகள் கட்சி

எத்தனை தடைகள் போட்டாலும் இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் வரை ஓய மாட்டோம்.
தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு.

நாம் வலுப்பெறுவோம். இயக்கமாய் இணைவோம்.

Leave a comment