“வெளிநாட்டு வருமானம் நிறுத்தப்படும் என அஞ்சுபவர்களே சைட்டத்தை எதிர்க்கின்றனர்”-நெவில் பெர்னாண்டோ

9137 66

மருத்துவக் கல்விக்காக ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு மாணவர்களை ஏற்றுமதி செய்து இலாபம் உழைப்பவர்களே, உள்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி உருவாக தடையாக உள்ளதாக சைட்டம் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்விக்காக ரஷ்யாவிற்கு மாணவர்களை அனுப்பும் அரச சார்பற்ற நிறுவனக் குழுவொன்று மாணவர்களை தவறாக வழிநடத்தி ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளை நடத்துகின்றனர்.இதன்மூலம் மாணவர்களை சிறைக்குள் தள்ளவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு சிறை செல்லும் மாணவர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாவை இவர்கள் வழங்குகிறார்கள்.

சைட்டம் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ நேற்று(27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக செயற்படுவதுடன் மாணவர்களையும்  தூண்டி விடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டுமொரு வேலை நிறுத்தத்தை இவர்கள் செய்வார்களேயானால் இதனை ஒரு அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமென நான் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன் என்றும் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் வீரவர்தனவை சந்தித்தேன். எமது நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் வழங்குமாறு எழுத்து மூலம் கையளித்தேன்.

எமக்கு எதிராக செயற்படும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினுள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் குழு ஒன்று இயங்குகின்றது. மருத்துவ சபையிலும் இவ்வாறானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் இந்த சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக பேரணிகளை, ஆர்ப்பாட்டங்களை செய்கிறார்கள். மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை வீதியில் இறக்கி போராட்டங்களை நடத்துகிறார்கள்.

மாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தும் குழுக்களை போன்று மருத்துவ சங்கத்தினரும் மிருகங்களைப் போல மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்தால் மக்கள் இனியும் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.

இவர்கள் ஏழைகளின் பணத்தில்தான் ஆரம்பித்தார்கள் ஏழை தாய் தந்தையரால் கொள்முதல் செய்யப்படும் கொத்தமல்லி, கருவாடு, மிளகாய், உப்பு போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.

இவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை செய்வார்களேயானால் அதேபோன்று அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும்.

இதை விடுத்து அரசாங்கம் இந்த தொழிற்சங்கங்களுக்கும் அரச சார்பற்றவர்களுக்கும் நாட்டை நிர்வகிக்க கொடுத்துவிட்டால் சுகாதார அமைச்சை அடித்து துவம்சம் செய்தது போல ஜனாதிபதி செயலகத்தினுள்ளும் புகுந்து துவம்சம் செய்வார்கள். இப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியாது அரசாங்கம் என்றால் இப்படி நிர்வாகம் செய்து கொண்டிருக்க முடியாது.

அரசு அமைச்சரவை பத்திரம் மூலம் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்றும் பட்டம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது. இதற்கு எம்மால் உடன்பட முடியாது. ஒரு சரியான நடைமுறையின் கீழ் செய்ய வேண்டும். வெறுமனே வர்த்தமானி அறிவித்தலின் மூலம் செய்துவிட முடியாது. எனினும் புதிய மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

இது ஒரு தனியார் நிறுவனம் என்ற வகையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் பின் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள எம்மால் முடியும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரிடம் கூறியிருக்கிறோம். .

மருத்துவ சங்கத்தின் பின்னாலோ வீதியில் இறங்கும் பங்கரவாதிகள் பின்னாலோ நாட்டு மக்கள் செல்லமாட்டார்கள். சைட்டம் நிறுவனம் இலவச கல்வியுடன் இணைந்து செல்ல வேண்டுமென்பதையே மக்களின் 90 வீதமானோர் விரும்புகின்றார்கள். இதுவே எமது நிலைப்பாடு எனவும் டாக்டர் நெவில் பிரணாந்து மேலும் கூறினார்.

Leave a comment