சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனு தள்ளுபடி

511 0

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்தவர் தாக்கல் செய்திருந்த மனுவில், சிப்காட்டிலுள்ள பெப்சி, கோக் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அந்த நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுவதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.வேல்முருகன் ஆகியோர் அமர்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிப்காட்டில் உள்ள பெப்சி, கோக் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment