அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்

259 0

பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவரை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன கலப்படம் செய்கின்றன என தனியார் பால் நிறுவனங்களின் பாலினை குடிப்பதால்தான் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியதுடன் பொதுமக்கள் பால் வாங்கி அருந்துவதை தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளி வந்தார்.

கலப்படம் செய்வதாக சொல்லப்படும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தனியார் பால் நிறுவனங்களை மிரட்டுகின்ற வகையிலும் பேசி வந்ததால் பொது மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் பொருட்டு ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பால் முகவர்கள் அடங்கிய கூட்டமைப்பான எங்களது சங்கம் அமைச்சரின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு மே மாதம் வரையில் சோதனை செய்த பாலின் மாதிரிகளில் பால்வளத்துறை அமைச்சர் கூறிய ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்தாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் பலவேறு வேதிப் பொருட்களின் கலப்படம் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.

மேலும் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு தமிழக பால் வளத்துறை சார்பில் அனுப்பப்பட்ட பால் மாதிரிகளிலும் அமைச்சர் கூறியதைப் போன்ற ரசாயணப் பொருட்கள் கலப்படம் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

எனவே உண்மைக்கும் புறம்பான தகவல்களை தொடர்ந்து பேசி பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி வருவதோடு, ஒரு உள்நோக்கத்திற்காக பொது மேடைகளிலும், ஊடகங்களிலும், பேசி வரும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எங்களது சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்தோம்.

இந்நிலையில் நேற்று சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்தரபாலாஜி என்னை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கச் சொல்லும் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி பால் முகவரே அல்ல, அவர் ஒரு டூபாக்கூர், அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம் எனவும் அவர் தனியார் பால் நிறுவனங்களுக்கு இடைத் தரகராக செயல்படுபவர், தனியார் பால் நிறுவனங்கள் அவரை பணத்தால் விலைக்கு வாங்கி பேச வைக்கின்றன. என என் மீதும், எங்களது சங்கத்தின் மீதும் உண்மைக்கும் புறம்பான தகவல்களையும், அவதூறுகளையும் அடுக்கடுக்காக அள்ளி வீசி பேசி எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

எங்களது சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து வரும் நான் ஏதேனும் ஒன்றே அல்லது அதற்கு மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவோ அல்லது தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து எந்த சூழ்நிலையிலாவது பணம் உள்ளிட்ட ஏதேனும் ஆதாயங்களை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கான ஆதாரத்தை மக்கள் மன்றத்தில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லது அவர் பேசிய பேச்சுக்களை உடனடியாக திரும்ப பெறுவதோடு அவர் அவ்வாறு பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது எங்களது சங்கத்தின் மீதும், என் மீதும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து, எங்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முனைந்தமைக்காக எங்களது சங்கத்தின் சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment