அணி மாறாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்

199 0

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ராஜபாளையம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பால கங்காதரன் தலைமை தாங்கினார்.வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் நலம்பெற வேண்டியும், விடுதலை பெற வேண்டியும் தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்.எடப்பாடி பின்னால் இருக்கும் 122 எம்.எல்.ஏ.க்களும் அப்போது ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டு கட்சியை நடத்த பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்பட்டபோது சசிகலா அணியில் இருக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டது. பணத்துக்கு நாங்கள் அடிமையாகி, விலை போகாமல் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்து விட்டோம். 30 அல்ல 300 கோடி ரூபாய் தந்தாலும் சசிகலா பக்கம் செல்ல மாட்டோம்.

விரைவில் இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு கிடைக்கும். சசிகலாவின் பினாமி ஆட்சி கலைக்கப்பட வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment