போரூர் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் திறக்கிறார்

286 0

போரூர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் திறந்து வைக்கிறார். இதை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை போரூரில் மவுண்ட் பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடத்தில் பாலம் கட்டும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.32 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.பூந்தமல்லியில் இருந்து கிண்டி செல்லும் சாலையில் போரூர் சந்திப்பில் இந்த பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலம் அமைப்பதற்காக தூண் அமைக்கும் பணி நடந்த போது இதன் அருகில் குடிநீர் குழாய் சென்றது. இதனால் தூண் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது.இதற்கிடையே 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குடிநீர் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் புதிய திட்டத்தை உருவாக்கி தருமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

இதையடுத்து பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு குடிநீர் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.53 கோடி செலவில் திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.அதன்படி குடிநீர் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. 7 ஆண்டுகளுக்கு பிறகு மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் சிறிய அளவிலான வேலைகள் பாக்கி இருந்தன.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால் போரூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் போரூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மாற்றி நிறுத்திவிட்டு பொதுமக்கள் பாலத்தை போக்குவரத்துக்காக பயன்படுத்தினர். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பாலத்தை மூடினர். அதன் பிறகு விடுபட்டிருந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போரூர் மேம்பாலத்தை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். தற்போது பாலப்பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. 475 மீட்டர் நீளத்துக்கு இந்த பாலம் அமைந்துள்ளது.

இதையடுத்து போரூர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் திறந்து வைக்கிறார். இதை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment