ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்: ஜி.கே.வாசன்

361 0

ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் த.மா.கா. சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடை பெற்றது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆளுநரை நியமனம் செய்ய வேண்டும். மக்கள் நடமாடும் இடங்களில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கூடாது. ஜனாதிபதி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஜனாதிபதி தேர்தலில் த.மா.கா. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவர்களை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவர்களுக்கு தலைவலியாக உள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதற்கு ஏற்றாற்போல குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக செயின் பறிப்பு சம்பவங்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது.

மக்கள் அச்சத்துடன் வெளியில் வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து உச்சபட்ச தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து உறுதியான அறிவிப்பு இல்லாதபோது அதுகுறித்து பேசுவது நாகரிகமானது அல்ல. நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் இந்த நாடு செயல்படுகிறது. சட்டம் தன் கடமையை செய்யும்.

சிறுபான்மையினரை ஒதுக்கிவைத்து விட்டு மத்திய-மாநில அரசுகள் செயல்பட முடியாது. சிறுபான்மையினரின் முன்னேற்றம் அரசின் முன்னேற்றம் ஆகும். மத்தியில் ஆளும் அரசு எந்த மதத்திற்கும் எதிராக இருக்கக் கூடாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் மக்களின் மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குதிரை பேர குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment