புதிய அமைச்சர்களை தெரிவு செய்ய கால அவகாசம் எடுக்கவும்- .சிவாஜிலிங்கம்

273 0

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், அந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது போதிய கால அவகாசம் எடுத்து சரியான தெரிவுகளை செய்யவேண்டும் என்று வடக்கு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு எதிராக அதிக குற்றச்சாட்டுக்களை சுமத்தி இரு அமைச்சர்களையும் பதவி விலக்கவேண்டும் என பரிந்துரை செய்திருந்த நிலையில் மேற்படி இரு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கின்றனர்.

இராஜினாமா செய்த அமைச்சர்களின் கீழ் இருந்த அமைச்சு துறைகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று உத்தியோகபூர்வமாக சத்தியபிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

புதிய அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக சகல தரப்பினருடனும் பேசப்படவேண்டும். குறிப்பாக மத தலைவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் கூட்டமைப்பின் கட்சிகள் அனைத்துடனும் பேசப்படவேண்டும் என்பதை நாங்கள் முதலமைச்சருக்கு கூறியிருக்கின்றோம்.

மேலும் புதிய அமைச்சர்கள் தெரிவில் அவசரம் காட்டப்படாமல் முதலமைச்சர் தனக்கு தேவையான அளவு நாட்களை எடுத்து சரியானவர்களை தெரிவு செய்யவேண்டும் என்பதையும் கூறியிருக்கின்றோம்.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் 4 கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் பெறப்படவேண்டும் என்பதையும் முதலமைச்சருக்கு கூறியிருக்கின்றோம்.

இதேவேளை, முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக மீள் பரிசீலணை செய்யப்பட்டவேண்டும் என முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பாக கேட்டபோது அந்த விடயம் கட்டாயம் ஆராயப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? என உறுதிப்படுத்தப்பட்டு அதன் ஊடாக அவர்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு நிச்சயம் உதவும்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக மீள் பரிசீலணை செய்வதற்கு விசேடசபை ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் நாங்கள் முதலமைச்சரை கேட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a comment