நாட்டை விட்டு வெளியேறவும் தயார்: பொதுபல சேனா பகிரங்க அறிவிப்பு

4315 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது கை வைத்தால் ஸ்ரீலங்காவில் மீண்டும் அசாதாரண நிலைமை ஏற்படும் என்று பேரினவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றான ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஞானசார தேரருக்கு உயிர் பாதுகாப்பு உத்தரவாரம் அளிக்கும் பட்சத்தில்தான் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்றும் மாகல்கந்தே சுதத்த தேரர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ராவணா பலய அமைப்பும், பொதுபல சேனாவும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் டிலந்த வித்தானகே, ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளர் பிக்கு ஒருவரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் “ஞானசார தேரருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாடு மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பும். அபிவிருத்திகள் தடைப்படும்.

மீண்டும் ஒருமுறை இறந்த காலத்தை நோக்கி நகரும். நாட்டில் நெருக்கடி ஏற்படும். எனவே ஞானசார தேரரை பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். விசாரணைகளில் எமக்கு வாக்குறுதி ஒன்று அளிக்கப்படும் பட்சத்தில் ஞானவார தேரர் மன்றில் முன்னிலையாவார்.

கலபொட அத்தே ஞானசார தேரருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் நாளை மறுதினம் உயர்நீதிமன்றத்தில் இடம்பெறும் மனு மீதான விசாரணைக்கு சிலவேளை அவர் முன்னிலையாவார் என்று நம்புகிறோம். அவரது உயிர்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால்தான் அவர் முன்னிலையாவார். இந்த நற்செய்தியைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளுக்கு இப்போது கூறமுடியாத இடங்கிளல் எல்லாம் சிரிப்பு வரும்” – என்றார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாகல்கந்தே சுதத்த தேரர், ஞானசார தேரர் முன்வைத்துவரும் சிங்கள இனத்தின் பிரச்சினைகளை செவிமடுத்து தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நாட்டை விட்டு வெளியேறவும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

“ஞானசார தேரர் முன்வைத்துள்ள பிரச்சினைகளை நாளை முதல் பேச்சுநடத்தி தீர்வுகண்டால் ஞானசார தேரர் உட்பட நாங்கள் மௌனிப்பதுடன் ஸ்ரீலங்காவில் இருக்க வேண்டாம் என்று கூறினாலும் நாட்டைவிட்டு வெளியேற நாங்களும் தயார்.

கிழக்கில் இடம்பெறும் புராதன சொத்துக்கள் அழிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் வாயை மூடிக்கொள்வோம். ஆனால் சிங்கள பௌத்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இதுகுறித்து பேசாமல் ஞானசார தேரரை தூற்றுகின்றனர். கிழக்கில் இடம்பெறும் இன சுத்திகரிப்பைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

அதைவிடுத்து இப்பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பும் பிக்குகள் மீதே நமது பிரிவினர் தாக்குகின்றனர். கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களிலும், மக்களும் ஞானசார என்ற நாமத்தை உச்சரிக்கின்றனர் தவிர, அவர் கூறவரும் விடயத்தை பற்றி பேசுவதில்லை. ஞானசார தேரரை கைது செய்வது குறித்து மட்டுமே பேசுகின்றனர். வாக்களித்த சிங்கள மக்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய இந்த அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் சிங்களவர்கள் மற்றும் புராதன சொத்துக்களுக்கு நடப்பது என்ன என்பது குறித்து இப்போதாவது சிந்தியுங்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன்.

முடிந்தால் கிழக்கில் புராதன சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன, கிழக்கில் விகாரை காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, நாட்டில் முஸ்லிம் இனவாதங்கள் இருப்பதாக கூற முடியுமா? இல்லை அவர்கள் கூறமாட்டார்கள்.

ஏனென்றால் இவர்கள் அனைவரும் அடுத்த அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a comment