தமிழர்களின் இரத்தக்கறை படிந்த இசுடாலினை செனீவா அழைத்தமை பச்சைத் துரோகம்! இரா.மயூதரன்!

1325 0

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்தின் தடத்திற்கு இணையாக துரோகத்தின் வீச்சும் மேலோங்கியே வருவது வரலாற்றின் வழிநெடுகிலும் உணரப்படுமளவிற்கு பெரும் இழப்புகளையும், பின்னடைவுகளையும் எமக்குத் தந்துகொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத பேருண்மையாகும்.

தமிழீழம் கடந்து தமிழர் நிலம்சார்ந்த ஆட்சி-அதிகாரம் கொண்ட தேசமாக விளங்கிவரும் தமிழ்நாட்டிற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையறுந்து போய்விடாத தொடர்புகள் உண்டு. அப்பேற்பட்ட தமிழ்நாட்டில் இருந்தும் துரோகத்தின் வீச்சு எமது விடுதலைப் போராட்டத்தை பாதித்துக் கொண்டிருக்கின்றதென்றால் கருணாநிதி-இசுடாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழினத் துரோகமே காரணமாகும்.

நடந்த இனவழிப்புப் போரினை தடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஆட்சி-அதிகாரத்தினை கைவசம் வைத்திருந்த போதாகட்டும், நடத்தப்பட்ட இனவழிப்பிற்கான நீதியை தடுத்து தாமதப்படுத்தும் சக்திகளை முறியடிக்கும் அரசியல் பலம்பெற்றிருக்கும் இன்றைய நிலையிலும் அதுகுறித்தான கடுகளவேனும் முயற்சிக்காத இசுடாலினை தற்போது செனீவா அழைப்பதானது பச்சைத் துரோகமாகும்.

கருணாநிதி பயணித்த தமிழினத் துரோகத்தின் வழியே தடம் மாறாது இசுடாலினும் பயணித்துவருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழினத் துரோகத்தின் அத்தியாயமாக வலுப்பெற்றுள்ளதென்றால் மிகையாகாது.

தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான நிலையைப் பயன்படுத்தி எப்படியாவது ஆட்சி-அதிகாரத்தை கைப்பற்றிவிட இசுடாலின் துடியாய்த் துடித்துவருகிறார். அதன் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த முயற்சியாகும்.

இசுடாலினின் தமிழினத் துரோகத்தை செனிவாவில் கடைவிரிக்க முழு முயற்சி எடுப்பது பிரான்சில் வசித்துவரும் தமிழ் உலகம் மற்றும் பாரதி என்கிற அரச சார்பற்ற நிறுவனங்களை நடத்திவரும் பொ(ஸ்)சுக்கோ என்ற ஈழத்தமிழரென அறியமுடிகிறது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளது. அதனடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தியே தமிழினத் துரோகி இசுடாலினை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் திமுக வைச் சேர்ந்த வழக்கறிஞர் இராதாகிருட்டினன் அவர்களின் புலம்பெயர் தொடர்புகளினூடாக பொ(ஸ்)சுக்கோ மற்றும் கயன் ஆகியோருடன் இணைந்து இந்த பச்சைத்துரோகம் அரங்கேற்றப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து பொசுக்கோ மற்றும் கயன் ஆகியோருடன் தொடர்புகொண்ட புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் திமுக தரப்பின் தமிழினத் துரோகத்தை குறிப்பிட்டு இசுடாலினை அழைக்கும் முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தியபோதிலும் அதனை ஏற்கமறுத்துவிட்டார்கள்.

அவர்கள் மீது தவறில்லை… அவர்களது தமிழகத் தொடர்புகள் மூலம் வழங்கப்பட்டுவரும் தவறான அரசியல் எதிர்வுகூறல்களே இவ்வாறான வரலாற்றுத் தவறிற்கு துணைபோக வைத்துள்ளது. அதீத ஆளுமையுடன் திகழ்ந்த முன்னாள் முதல்வர் செயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்னரான தடுமாற்றமான அரசியல் சூழலில் இசுடாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சி-அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்தில் இசுடாலினை முன்னிறுத்தும் அரைவேக்காட்டுத்தனத்தின் அடிப்படையிலான முடிவாகும்.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் இதே இசுடாலின் உள்ளிட்டவர்களை சாட்சியாக வைத்து, போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அவர் கூறிய வார்த்தைகளை நம்பி பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்த எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் குண்டுவீசிப் படுகொலை செய்யப்பட்டதை மறந்து விட்டீர்களா…?

மிக அண்மையில், இந்த துயரம் மிக்க தருணத்தை நேரடியாக கண்ணுற்ற நண்பனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது இசுடாலினின் செனீவா பயணம் குறித்த செய்தியை கூறியபோது… துலைவான் கருணாநிதி சொன்னதை நம்பி பதுங்கு குழிகளை விட்டு வெளியால வந்த சனம் அத்தனையும் செத்துக்கிடந்ததை எப்படி மறக்க முடியும்…? என்று தணியாத கோபத்துடன் கூறியிருந்தார். எட்டு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் நேற்று நடந்த நிகழ்விற்கான எதிர்வினைக்கு இணையான கோபத்தை அவனது பதிலுரைப்பில் அறியமுடிந்தது.

எட்டு ஆண்டுகள் அல்ல காலம் உள்ளவரை அழியாத ரணமாக தமிழர் நெஞ்சங்களில் பதிந்துவிட்டது முள்ளிவாய்க்கால் பெருந்துயரம். அதைவிட, இது குறித்து கருணாநிதியிடம் அப்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது ‘மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை’ என்று எகத்தாளம் பேசியது கொடுமையிலும் கொடுமை.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டு தம்மைத் தாமே தலைவர்களாகவும், இராசதந்திரிகளாகவும் கருதிக்கொள்வோர் இசுடாலின் தமிழினத் துரோகத்தை செனீவாவில் கடைவிரிக்க பாதையேற்படுத்திக் கொடுத்தாலும் ‘ஈகைப் பேரொளி’ முருகதாசன் மூச்சுக்காற்று உலவும் செனீவா முன்றலில் ஒன்றுகூடி துரோகத்தனத்தை முறியடிக்க மானத் தமிழர்கள் அணியமாகிய தகவல் அறிந்து இசுடாலினே பின்வாங்கியுள்ளார்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தமிழினத் துரோகத்தின் நெடி பரவியுள்ளது.

‘இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களில் இரண்டறக் கலந்து இருக்கும் எனக்கு, இது மிக முக்கியமான தருணம் என்றே கருதுகிறேன். “தமிழர்களின் மனித உரிமைகளை மீறக்கூடாது”, என்று எனது நாடு திரும்பத் திரும்ப இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியும், 2009 ஆம் ஆண்டு நடைபெற்றப் போரில், தமிழர்களுக்கு எதிரான மிக கடுமையான மனித உரிமை மீறல்களை இலங்கை ராணுவம் செய்தது.’ இவ்வாறு கூறப்பட்டுள்ளமையானது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமாகும்.

‘எனது நாடு’ என்று இசுடாலின் சொல்லும், சோனியா தலைமையிலான காங்கிரசு அரசு 2008/9 களில் என்ன செய்தது என்பது உலகறிந்த நிலையில் காங்கிரசின் தமிழினத் துரோகத்திற்கும் சேர்த்து வெள்ளையடிக்கும் நோக்கிலேயே இவ் அறிக்கை அமைந்துள்ளது. தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதங்களையும், ராடர்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் வாரி வழங்கிய சோனியா-காங்கிரசு அரசின் தமிழினத் துரோகத்தை வெள்ளையடிக்கும் நோக்கில்தான் சிங்கள இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படுகிறது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது…

இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வும் அளிக்காமல், அந்த ஒப்பந்தத்தையே இலங்கை அரசு அவமதித்தது. தமிழர்களுக்கு அநீதி இழைப்பதிலும், பாகுபாடுடன் அவர்களை நடத்துவதிலும், அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடுவதிலும் இலங்கை அரசும், அதன் ராணுவமும் ஒருமித்த நோக்குடன் செயல்பட்டன.

இதுபோன்ற சூழ்நிலையில், போர் மேகங்கள் மூளும் போதெல்லாம் அப்பாவித் தமிழர்களின் மீது இரக்கமற்ற இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள், உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய கொடுமையாகப் பதிவாகியுள்ளது. 1956 ஆம் ஆண்டு ஆரம்பித்த இப்படிப்பட்ட இராணுவத் தாக்குதல்கள், 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உச்சக்கட்டத்தை எட்டியது.

அதன்பிறகு, போரில் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுசம்பந்தமாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் இதுவரை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. பாரபட்சமற்ற, சுதந்திரமான, சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்ட பிறகும் இன்றுவரை இலங்கை அரசு தனது தார்மீக மற்றும் அரசியல் சட்டரீதியான பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் சுயமரியாதையுடன், கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது இலங்கை அரசு.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், இன்றுவரை தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 1,46,679 தமிழர்கள் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். தமிழ் இளைஞர்கள் இன்றும் கொடூரமான உள்ளூர் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

மேலும், தமிழர் வாழும் 18,800 சதுர கிலோமீட்டரில் 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச மனித உரிமை சாசனங்களான “உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்”, (Universal Declaration of Human Rights) “பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Economic, Social and Cultural Rights) மற்றும் “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Civil and Political Rights) ஆகியவை இலங்கை அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும் திட்டமிட்டு மீறப்பட்டு தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு தக்கதொரு நியாயத்தை பெற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது அமைந்திருக்கிறது.

எனவே, தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென இச்சமயத்தில் கோருகிறேன். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கையில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.

அப்படியொரு தீர்வை, வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான அமர்வில், மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தற்போது நடைபெற்றுவரும் அமர்வானது எதுவித முக்கியத்துவமற்ற கலந்துரையாடல் அமர்வென்பதுடன் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா விடயம் இல்லவே இல்லை என்ற நிலையே இந்த அறிக்கையின் பித்தாலாட்டத்தினை தோலுரிக்கப்போதுமானதாகும். அத்துடன் உலகத் தமிழர்களை ஏமாற்றி மீண்டும் அரியணை ஏறிவிடத்துடிக்கும் இசுடாலின் பங்கேற்க இருந்தது மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வுகளில் அல்ல. தமிழ் உலகம் அமைப்பினரால் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வொன்றிலேயே இசுடாலின் பங்கேற்பதாக இருந்தது குறிப்படத்தக்கது.

குறித்த நிகழ்வில் பங்கேற்காதது குறித்து அவரது பயணத்தை ஏற்பாடு செய்த தமிழ் உலகம் அரச சார்பற்ற நிறுவனத்தினருக்குத்தானே அதுகுறித்த தகவல் வழங்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து தமக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து உலகத் தமிழர்களை ஏமாற்றவே இந்த அறிக்கை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் மறுக்கமுடியாத உண்மையென்பது ஒருபக்கமிருக்க அதைக் கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது இசுடாலின் அவர்களே…?

1953 இல் பிறந்து.. 1968 இல் அரசியலில் அடியெடுத்துவைத்தது முதல் கட்சிக்காக 1975 இல் சிறைவாசம்.. 1980 களில் இளைஞர் அணியில் அங்கத்துவம்.. 1996 இல் சென்னை மாநகர முதல்வர்.. 2006 இல் உள்ளாட்சித்துறை மந்திரி.. 2009 இல் துணை முதல்வர்.. 2017 இல் திமுகவின் செயல் தலைவர் ஆகியது வரையான நாற்பது ஆண்டுகள் கடந்த அரசியல் பயணத்திற்கு இணையாக நாடந்தேறி வரும் தமிழினப் படுகொலை குறித்து இதுவரைகாலமும் அறிந்திருந்தும் அதுகுறித்து ஏற்படாத அக்கறை தற்போது வந்துள்ளதென்றால் உங்கள் தந்தை வழியே அரசியல் ஆதாயத்திற்காகவே கையிலெடுத்துள்ளீர் என்பதை இச்செயற்பாட்டின் மூலமாக திட்டவட்டமாக உணர்த்தியுள்ளீர்கள்.

1956 இல் இருந்து தமிழினப்படுகொலை அத்தியாயம் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் உச்சம்தொட்டது மட்டுமல்லாது இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகின்ற நிலையில் திடீரென கோமா நிலையில் இருந்து தற்போதுதான் மீண்ட நோயாளி போன்று ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறை காட்டுவது வேடிக்கையாகவே உள்ளது.

எமக்காக இவ்வளவு உருகும் இசுடாலின் அவர்களே இனப்படுகொலை நடக்கும் போது எங்கே போயிருந்தீர்கள்…?

கடந்த 8 ஆண்டுகளாக நாம் நீதி வேண்டி போராடிக் கொண்டிருக்கும் போது எங்கே போயிருந்தீர்கள்…?

கடந்த மார்ச் மாத அமர்வில் இனப்படுகொலை சிறிலங்கா அரசிற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட இருப்பதாக நாம் பதறித்துடித்து போராடிய போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்…?

தமிழ் இளைஞர்களை சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்ணைக் கட்டி தலையில் சுட்டுப் படுகொலை செய்த காட்சி சனல்-4 தொலைக்காட்சி மூலம் வெளியாகி உலகத் தமிழர் நெஞ்சத்தை பிசைந்த போது அது பழைய காட்சிப்பதிவு போல் உள்ளதென்று முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பூசி மெழுகிய போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்…?

உண்ணாவிரத நாடகத்தை முடித்து போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக கருணாநிதி கூறியதை நம்பி பதுங்குழிகளை விட்டு வெளியே வந்த பல்லாயிரம் தமிழர்களை குண்டு மழை பொழிந்து கொல்லப்பட்ட போது மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை என்று எகத்தாளம் பேசிய போது எங்கே போயிருந்தீர்கள்…?

இப்படி ஏராளம் அடுக்கிக்கொண்டே போகலாம். எதற்குமே உங்களிடம் பதில் இருக்காது. ஏன் என்றால் உங்களது சுய அறிவிற்கு தெரிந்தே அத்தனையும் நிகழ்ந்தது.

இசுடாலின் அவர்களே உங்கள் முன்பாக ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. இவை அத்தனைக்கும் உங்கள் தந்தையான கருணாநிதியே காரணம். எனக்கும் இவற்றிற்கும் எதுவித தொடர்புமில்லை. கட்சியும் தலைமைப் பொறுப்பும் தற்போதுதான் எனது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்பேன் என்று பகிரங்கமாக அறிப்பது ஒன்றே உங்கள் முன் உள்ள ஒரே வாய்ப்பாகும். இசுடாலின் அவர்களே இவ்வாறு அறிவிக்க நீங்கள் தயாரா…?

மேலே குறிப்பிட்ட அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்காக உருகுவது உண்மையாக இருந்தால் இதை மட்டுமே நீங்கள் செய்தாக வேண்டும் இசுடாலின் அவர்களே. செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா…? அவர் செய்வது ஒருபுறமிருக்க, இசுடாலினை செனீவா அழைத்து அவரது துரோகத்தை கடைவிரிக்க ஏற்பாடு செய்த உத்தமர்களாவது இதை சாத்தியப்படுத்துவார்களா…?

நாற்பது ஆண்டுகால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முகம்புதைத்தது போன்று எட்டு ஆண்டுகளின் பின்னர் செனீவாவிலும் முகம்புதைத்துள்ளமைக்கு தமிழினத் துரோகமே முழுக்காரணமாகும்.
முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தினை அத்திவாரமாக்கி செனீவாவில் திறக்கப்பட்ட உரிமைப் போராட்டக்களத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய சம்பந்தன்-சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பினர் நீதிகான போராட்டத்தை சிங்கள பொத்த பேரினவாதத்தின் காலடியில் பாதகாணிக்கை செய்துவிட்டார்கள்.

சம்பந்தன்-சுமந்திரன் குழுவினரின் சுயநலன்சார் அடிபணிவு அரசியலால் காவுவாங்கப்பட்டது போக எஞ்சியிருக்கும் மிச்ச சொச்சத்தையும் கோபாலபுரத்து கயவர்களின் அரசியல் சுயலாபத்திற்காக பலிகொடுக்க முற்படுவதானது ஈனத்தனத்தின் உச்சமாகும்.

எமது உறவுகளை மண்ணுக்குள் புதைக்கவில்லை நாம் அவர்களை விதைத்துள்ளோம் என்பதை மறந்துவிடாதீர்கள் அன்பான மக்களே. இலட்சக்கணக்கான எமது உறவுகள் தம்மைத் தாமே கொன்று சாகவும் இல்லை, பாலியல் வன்புனர்விற்குள்ளாக்கிக் கொள்ளவும் இல்லை, அவையவங்களை இழக்கவுமில்லை, அநாதைகாளாக்கப்படவும் இல்லை, விதைவைகளாக்கப்படவும் இல்லை. எல்லாம் நடந்தது தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே. அவை நிகழ்த்தப்பட்டது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பு இனவெறியின்பாற்பட்டே. அவற்றை நிகழ்த்தியது சிங்கள இனப்படுகொலை இராணுவமே.

அழித்தவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். அவர்களுக்கு துணையாக எமது தரப்பில் இருந்தும் சிலர் சேர்ந்து நின்று மேலும் பலம்சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிரியைவிட தற்போது எமது முன்னேற்றத்திற்கு பெருந்தடையாகவும் அச்சுறுத்தலாகவும் திகழ்வது துரோகமே. முதலில் நாம் கருவறுக்க வேண்டியது துரோகத்தையே.

“எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள்; எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

இரா.மயூதரன்.
(18/06/2017)

Leave a comment