மகன்கள் சொத்து குவித்தது பற்றி நவாஸ் ஷெரீப்பிடம் சரமாரி கேள்வி

329 0

பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு முன் பிரதமர் நவாஸ் ஆஜரானபோது, மகன்கள் சொத்து குவித்தது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில்களை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. இது ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடந்து வருகிறது.

கேள்வித் தொகுப்பு ஒன்றை தயாரித்து வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே சம்மன் அனுப்பி, வரவழைத்து கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து, 15-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராகுமாறு கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பியது.

நவாஸ் ஷெரீப் ஆஜர் ஆவதையொட்டி, இஸ்லாமாபாத்தில் கூட்டு புலனாய்வுக்குழு இயங்கி வருகிற எச்-8/4 செக்டார் முழுவதும் சுமார் 2,500 போலீசாரும், துணை ராணுவத்தினரும் நேற்று குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. முக்கிய முனைகளில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் மற்றும் மகன்களில் ஒருவருடன், ஜூடிசியல் அகாடமியில் உள்ள கூட்டு புலனாய்வுக்குழு செயலகத்துக்கு வந்தார். அப்போது அவர் பதற்றமின்றி நிம்மதியுடன் காணப்பட்டார். தன்னை ஆதரித்து கோஷமிட்ட ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.

அவர் கூட்டு புலனாய்வுக்குழுவின் முன் ஆஜர் ஆனார். அவரிடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரிடம், அவரது மகன்கள் சொத்துகள் வாங்கியது எப்படி, தொழில் நிறுவனங்கள் தொடங்கியது எவ்வாறு என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கூட்டு புலனாய்வுக்குழுவினர் எழுப்பி பதில்களை பதிவு செய்ததாக தெரிகிறது.

விசாரணை முடிந்த பின்னர் நவாஸ் ஷெரீப், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “இது பாகிஸ்தான் அரசியல் சாசன வரலாற்றில் ஒரு மைல்கல். நான் எனது ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கொடுத்துள்ளேன். நானும் எனது குடும்பத்தினரும் முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியிலும், முஷரப் ஆட்சியிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். இப்போது எனது ஆட்சிக்காலத்திலும் இது நடந்துள்ளது. எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அடுத்த ஆண்டு மக்கள் கூட்டு விசாரணைக்குழுவின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்” என குறிப்பிட்டார். (அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பதையே இப்படி அவர் கூறினார்.)

விசாரணைக்குழு ஒன்றின் முன்பாக பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நேரில் ஆஜரானது இதுவே முதல் முறை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment