கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்

299 0

கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.
பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் செய்த தொடர் முயற்ச்சியால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் சமரசம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே பல்வேறு ராணுவம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், கியூபா நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை நிறுத்தும் அறிவிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்கிறார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூப அதிகாரிகளுடன் அந்நாட்டுடனான கொள்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் இன்று ஆலோசனை செய்கிறார். இந்த சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபாவிற்கான விமான மற்றும் கப்பல் போக்குவரத்து சேவை தடையில்லாமல் தொடரும் என்று வெள்ளை மாளிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment