ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள்

477 0

101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன் குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. இதற்கு எதிராக ஆர்மேனியா மக்கள் உலகளாவிய ரீதியில் போராடிவருகின்றனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதாலோ ஆர்மேனிய இன அழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகாத போராட்டமே இன்றும் ஆர்மேனிய இன அழிப்பை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருப்பதோடு, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட 20 நாடுகளையும் உலகின் முக்கியமான அமைப்புகளையும் எற்று அங்கீகரிக்க வைத்திருக்கிறது.

ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி நாடு முன்வைக்கும் பொய்யான கருத்துக்களை முறியடிக்கும் முகமாக முனைவர் டனர் சென்ற வாரம் யேர்மனியில் பேர்லினில் வெளியிட்ட நூல் அறிமுக நிகழ்வில் ஈழத்தமிழர்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் கலந்துகொண்டு ஆர்மேனியர்கள் தரும் படிப்பினைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டதோடு தமிழின அழிப்பு தொடர்பாக பிரேமன் மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவணத்தையும் முனைவர் டனர் அவர்களுக்கு கையளித்தது குறிப்பிடத்தக்கது.