குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

307 0

காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக கூறி, சில குடிநீர் உற்பத்தி நிறுவனங்களை அரசு ‘சீல்’ வைத்து மூடியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 350 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. குடிநீர் நிறுவனங்களுக்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடு, மத்திய அரசின் சரக்கு சேவை வரியில் குடிநீர் கேன் மீது 18 சதவீதம் விதித்திருப்பது உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.