மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

441 0

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக, காவிரி ஆற்றின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு மற்றும் தொப்பையாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 20 அடிக்கும் கீழே இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,329 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று இந்த அளவு வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்றுமுன்தினம் 20.85 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

அதாவது, நேற்று காலை அணை நீர்மட்டம் 21.86 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் மாலையில் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.