இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் எம்மை அரசாங்கம் இனவாதிகள் போன்று சித்தரிக்க முயல்கிறது. உண்மையிலேயே அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எம்மை இனவாதிகளாக சித்தரிக்கவேண்டிய அவசியம் இல்லை அல்லவா என பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டுமெனில், சர்வதேச குற்றவியல் விசாரணையை நோக்கி நகரவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
வலியுறுத்துகின்ற எம்மை இனவாதிகள் போன்று சித்தரிக்க முற்படுகின்றனர். உண்மையிலேயே அவற்றைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருந்தால், எம்மை இனவாதிகளாக சித்தரிக்கவேண்டிய அவசியம் இல்லை அல்லவா? உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 17 ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சிய்ன சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது இதுவரை நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்ததன் காரணமாகவே கடந்த தேர்தல்களில் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்ததாக பிரித்தானிய பிரதி பிரதமரிடம் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாட்டில் இனப்பிரச்சினையொன்று நிலவுவதாகவும் அதற்குத் தீர்வுகாணப்படும் எனவும் தேர்தலுக்கு முன்னர் கூறிய அரசாங்கம், இப்போது அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என விசனம் வெளியிட்டார்.
அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல், வட, கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் உள்ளடங்கலாக எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என டேவிட் லமியிடம் எடுத்துரைத்த கஜேந்திரகுமார், இப்போது அவ்வாக்குறுகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகின்ற எம்மை இனவாதிகள் போன்று சித்தரிக்க முற்படுகின்றனர்.
உண்மையிலேயே அவற்றைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இருந்தால், எம்மை இனவாதிகளாக சித்தரிக்கவேண்டிய அவசியம் இல்லை அல்லவா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டுமெனில், சர்வதேச குற்றவியல் விசாரணையை நோக்கி நகரவேண்டியது அவசியம் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

