சுரேஷ் சலே தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அவரை கைதுசெய்துள்ளதன் மூலம் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகள் அனைத்தும் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிகக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
உளவுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நேர்மையான திறமையான ஒரு அதிகாரி. அதனால் அவரை திடீரென கைது செய்து, அவரின் நற்பெயரின் ஊடாக ஒரு சில விடயங்களால் அரசாங்கம் நற்பெயரை அடைந்துகொள்ள முயற்சிப்பதாக இருந்தால், அது மிகவும் அநீதியாகும். ஏனெனில் இதன் மூலம் பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு அதிகாரிகளின் மன தைரியம் பாரியளவில் வீழ்ச்சியடையும்.
அதனால் சலேயை கைதுசெய்து தப்பித்துக்கொள்ள முடியும் என நினைக்க வேண்டாம். அவரை கைதுசெய்துள்ளதன் மூலம் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகள் அனைத்தும் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறது.
அதேநேரம் சலே தவறு செய்திருந்த்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தி அவருக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுப்பது வேறு விடயம். ஆனால் முடியுமானவரை விரைவாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இதன் ஊடாக பொலிஸ் மற்றும் ராணுவத்துக்கு செல்லும் தகவல் மிகவும் தோசமானதாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபராக அவரை அரசாங்கம் காணலாம். ஆனால் சலேவை எமது நாட்டில் இருந்த அதிகாரிகளில் மிகவும் திறமையான, நேர்மையான அதிகாரியாவே அதிகமானவர்கள் காண்கின்றனர்.
அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம்.ஆனால் விரைவாக அவரை விடுவித்து, விசாரணை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் பொலிஸ், புலனாய்வுத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். அது அரசாங்கத்துக்கு நல்லதில்லை.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருக்கின்றன என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களில் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் யாராவது தவறிழைத்தவர்கள் இருக்குமானால் அவர்களை கண்டுபிடிப்பது தொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதேநேரம் கர்த்தினால் ஆண்டகை இது தொடர்பில் இதனையும் விட பாரிய எதிர்ப்புடன் இருக்கிறார். அதற்காக அரசாங்கமும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அதனை செய்வது நல்லது. ஆனால் இந்த விடயத்தில் சலே தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றே தெரிவிக்கிறேன். ஏனெனில் அது மீண்டும் சுற்றிவந்து, அரசாங்கத்துக்கு ஒரு சுனாமியாக அமைந்துவிடும் என்றார்.

