மலர்ச்சாலை என்ற போர்வையில் ஹெரோயின் வியாபாரம்: தாய், மகன் கைது!

14 0

பாணந்துறை வடக்கு பகுதியில் மலர்ச்சாலை என்ற போர்வையில், நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தாய் மற்றும் மகனை பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை (25) கைது செய்துள்ளனர்.

பாணந்துறை வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலர்ச்சாலை ஒன்றில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று மாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மலர்ச்சாலையின் உரிமையாளரின் மகன் மற்றும் அவரது தாயார் ஆகியோரிடமிருந்து 21 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலர்ச்சாலையின் பணிகளை முன்னெடுப்பது போல் நடித்து, இவர்கள் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

இந்தச் சட்டவிரோத வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.