நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது.இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.இதற்கிடையே நேற்று ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 5-வது ஆண்டில் நுழைந்தது.இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா.சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு’ என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்கு அளித்தன.ரஷியா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன.இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடு கள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.உக்ரைனின் தீர்மானத்தை ஆதரித்த 107 நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
அவர் கூறும் போது, உக்ரைனுடன் உயிர்களைப் பாதுகாப்பதில் நின்ற 107 நாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் மக்கள் நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன், நீடித்த அமைதிக்கு ஆதரவு அளிக்கும் எங்கள் தீர்மானத்தை ஐ.நா. சபை நிறைவேற்றியது என்றார்.

