“திமுக ஆட்சியை வீழ்த்துவதே எங்களது முதல் இலக்கு. நான் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மண்டல அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மேலும் பலப்படுவது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மற்றும் அதிமுகவுடன் சுமுகமான முறையில் ஆலோசித்து, தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எவ்விதப் பிரச்சினையும் இன்றி தொகுதிப் பங்கீடு நடைபெறும்.
திமுக ஆட்சியை வீழ்த்துவதே எங்களது முதல் இலக்கு. தென் மாவட்டங்களில் அமமுக ஒரு மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் இன்று சட்டம் – ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, வருங்காலத் தூண்களான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று கூறுவதை எங்களை போன்ற உண்மைத் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவை எதிர்ப்பதற்காகவே எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். 50 ஆண்டு காலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த தலைவர்களின் ஆசி திமுகவுக்குக் கிடைக்கும் என்று கூறுவது நகைப்புக்குரியது மற்றும் மனவேதனையை தருகிறது.
கடந்த தேர்தலிலேயே நாங்குநேரியில் எங்கள் வேட்பாளர் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இது அமமுகவிற்கு செல்வாக்குள்ள தொகுதி. எனவே, இங்கு தகுதியான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம். சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வேன்.
திமுக அரசு பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை பெறலாம் என கணக்குப் போடுகிறார்கள். ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். தேர்தலுக்காக அறிவிக்கப்படும் இலவச திட்டங்களும், உதவித்தொகைகளும் உண்மையான மக்கள் நலனுக்கானவை அல்ல. தேர்தலைச் சமாளிக்கவே அறிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களைப் பெறும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்குள் நிலவும் மோதல்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” என்று தினகரன் தெரிவித்தார்.

