ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தேர்தல் நடத்தப்பட்டால் எமது ஒற்றுமையின் பலத்தை; பார்க்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும்.
ஆனால் இந்த அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியே பாரிய மோசடி எனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 9 கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியை விட பன்மடங்கு மோசடி இடம்பெற்றிருக்கிறது. அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை யார் ஈடுசெய்வது? ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்குமா? இந்த சுமை மக்கள் மீது தான் சுமத்தப்படும். அதற்கான முன்னேற்பாடாகவே 13 சதவீத மின் கட்டணத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து நாட்டு மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தரக்குறைவான சேவைகளை மாத்திரமே இந்த அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றதே தவிர, வேறு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை.
தாம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரு மாதங்களுக்குள் மோசடிக்காரர்கள் சிறையிலடைக்கப்படுவர் என ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மோசடிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததை தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் உண்மையான குற்றவாளிகள் பலர் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட போது இவர்கள் கூறிய விடயங்களை தற்போது மக்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இயலாமை தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

