“தென்னக ரயில்வே மெத்தனம்…” – சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு குறித்து கனிமொழி எம்.பி கருத்து

12 0

“கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை – தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில் இயக்கத்தில் சில மாற்றங்களை செய்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், “நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.

ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.