உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய இராணுவம் தனது சொந்த வீரர்களையே ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்வதாகவும், உத்தரவுகளை மறுப்பவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ரஷ்ய முன்னாள் வீரர்கள் நால்வர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
2024ஆம் ஆண்டில் ‘ரஷ்யாவின் நாயகன்’ விருது பெற்ற ஒரு தளபதி, தனது கண்முன்னே ஒரு வீரரைச் சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் வீரர்களை அச்சுறுத்துவதற்காகவும், பணிபுரிய மறுப்பவர்களைத் தண்டிக்கவும் ரஷ்ய இராணுவம் ‘ஜீரோயிங்’ என்ற பெயரில் இந்த சட்டவிரோதப் படுகொலைகளை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ரஷ்யப் படைகள் ‘மீட் ஸ்டார்ம்ஸ்’ எனப்படும் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் வீரர்களை அலை அலையாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் வெடிமருந்துகளையும் ட்ரோன்களையும் தீர்ப்பதற்காக, எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வீரர்கள் போர்க்களத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
இதில் பங்கேற்க மறுக்கும் வீரர்கள், காடுகளின் குழிகளில் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போடப்படுகிறார்கள். அவர்களின் மீது சிறுநீர் கழிப்பது, மின்சார அதிர்ச்சி அளிப்பது மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்ற அத்துமீறல்கள் சாதாரணமானவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குழுவில் இருந்த 79 வீரர்களில் தான் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும், மற்ற அனைவரும் போரில் பலியான அல்லது கொல்லப்பட்டதாக இலியா (Ilya) என்ற முன்னாள் வீரர் ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவில் உள்ள வீரர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி புட்டினுக்கு எழுதிய கடிதத்தில், தங்களது பிள்ளைகள் போர்க்களத்தில் கசாப்பு கடைக்காரர்கள் போன்ற தளபதிகளால் கொல்லப்படுவதாகவும், தற்காப்பிற்கு ஆயுதங்கள் கூட வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும், ரஷ்ய அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தங்கள் படைகள் மிகுந்த கவனத்துடனும் கண்ணியத்துடனும் செயல்படுவதாகக் கூறி வருகிறது.
பிரித்தானிய பாதுகாப்புத் துறையின் மதிப்பீட்டின்படி, இந்தப் போரில் இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இந்த நான்கு வீரர்களின் வாக்குமூலம், ரஷ்ய இராணுவத்திற்குள் நிலவும் சட்டமின்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

