வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் க*/-*லைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் மத்திய மாநிலத்தின் அரங்காற்றுகை 14.02.2026 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. த.ஒ.குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சிவநேசன் சுதர்சன், முன்சன்கிளாட்பாக் கோட்டப் பொறுப்பாளர் திரு. வீரசிங்கம் சக்திவடிவேல், தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரும் நடுவருமான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன், தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவின் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் ஷதமிழ் மாணி| திருமதி சுபாசினி சடகோபன் மற்றும் முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிருவாகி ஷதமிழ் மாணி| திரு. ஹரிஹரசர்மா ஹிமேஷ் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றைத் தொடர்ந்து கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ஷதமிழ் மாணி| திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது.
தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான திறன்தேடும் போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை வாள்நடனம் அணிசெய்தது. மற்றொரு சிறப்பாகத்; தாய்நிலம் பிரிந்து புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையான வளரிளம் தமிழர்களின் நிகழ்கலைக் களமாக விரிந்த கூத்துப்போட்டியானது பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களைச் சிறப்பிக்கும் வகையில் மேன்மையுடன் மதிப்பளித்தனர்.
நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் கிறீபெல்ட், தமிழாலயம் முன்சன்கிளாட்பாக் மற்றும் தமிழாலயம் நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. யேர்மனியின் பல்வேறு நகரங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 17க்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன் போட்டி மதிப்பளிப்புகளோடு 20:25 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது.



































































































































































































