புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை படுகொலை செய்து, அவரது வாகனத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை, புத்தளம் – அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த விசாரணைகளுக்கமைய, உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதன்போது, முச்சக்கரவண்டியை கொள்ளையிடும் நோக்கில், சந்தேகநபர் குறித்த சாரதியின் கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் தில்அடிய – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும், பணத்திற்காகவே இந்த கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைக்குப் பின்னர், முச்சக்கரவண்டி முல்லை வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

