அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி இலங்கைக்கு வருகை!

10 0

இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவ ஆலயத்தின்  தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand Giriji Maharaj) உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (23) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-192 ரக விமானம் மூலம் வருகை தந்த இந்தத் தூதுக்குழுவில் துறவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 14 பேர் அடங்குவர்.

இவர்களை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இலங்கையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவ ஆலயங்களுக்கு இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.

குறிப்பாக, மன்னார் – திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் – நகுலேஸ்வரம், திருகோணமலை – கோணேஸ்வரம், நுவரெலியா – சீதா அம்மன் ஆலயம் மற்றும் பொலன்னறுவை – பண்டைய சிவ ஆலயங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தைச் சந்தித்து விசேட கலந்துரையாடலிலும் தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.