பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (23) இதுதொடர்பில் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாக தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி இதன்போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஜனாதிபதியை சந்தித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை கையளிப்பதற்காகவே இன்று வந்தோம். அதேபோல், எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு மூலம் எங்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதியிடமும் கேட்டுக்கொண்டோம்.
இந்த நேரத்தில் நாங்கள் நிர்க்கதியாக இருக்கிறோம். பிள்ளைகளுடன் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். எனினும், ஒரு நீதிபதி இவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்தார். அந்த ஒரு விடயமே எங்களை மூச்சுவிட வைக்கிறது. அவர் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளார். இவர்களுக்காக இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை அது உணர்த்துகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மேன்முறையீடு செய்து இந்த 12 பேரையும் வெளியில் எடுப்பதே எங்களது ஒரே எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

