நிலக்கரி கொள்வனவு மோசடி குறித்து ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு மோசடி குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க கடந்த 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முன்னிலையாகி நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி குறித்து முறைப்பாடளித்துள்ளார். அத்துடன் கொள்வனவு தொடர்பான தகவல்களையும் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் 7672 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
2026.02.19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புதிய விநியோகஸ்த்தர்களின் கீழ் 08 நிலக்கரி கப்பல்கள் ஊடாக நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இதனால் 7672 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் குறிப்பிட்டுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழல் மோசடி தொடர்பில் பாட்டலி சம்பிக்க முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் வலுசக்தி துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள்' குறித்து சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து நிலக்கரி மோசடி குறித்து விடயங்களை முன்வைத்திருந்தார்.
முதலாவதாக வந்த நிலக்கரி கப்பலால் 595.1 மில்லியன் ரூபா 2 ஆவது நிலக்கரி கப்பலால் 288.5 மில்லியன் ரூபா 3 ஆவது நிலக்கரி கப்பலால் 1407.4 மில்லியன் ரூபா 4 ஆவது நிலக்கரி கப்பலால் 865 மில்லியன் ரூபா 5 ஆவது நிலக்கரி கப்பலால் 1444.2 மில்லியன் ரூபா 6 ஆவது நிலக்கரி கப்பலால் 1497.7 மில்லியன் ரூபா 7 ஆவது நிலக்கரி கப்பலால் 974.9 மில்லியன் ரூபா மற்றும் 8 ஆவது நிலக்கரி கப்பலால் 1559.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய வங்கி பிணைமுறி மோசடியை காட்டிலும் பாரியதொரு மோசடியாகும். இந்த நட்டத்தை மீள அறவிட முடியும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்;.
அறவிடுவதையும் பார்க்கலாம். ஏன்று எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டிருந்தார். முறையான விலைமனுக்கோரலுக்கு அமைவாகவே புதிய விநியோகத்தர்களிடமிருந்து நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார் ஜெயகொடி, எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்தார்.

