அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரித்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துங்கள்!

12 0

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆளும் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும். வடக்கு,கிழக்கு உட்பட சகல மாகாணங்களிலும் போட்டியிடுவோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைகள் தேர்தல்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். ஆகவே மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும். வடக்கு,கிழக்கு உட்பட சகல மாகாணங்களிலும் போட்டியிடுவோம்.

எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்துடன் இன்றும் இருக்கிறார்கள் என்று குறிப்பிடும் அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் ஊடாகவே மக்களின் அபிலாசைகளை விளங்கிக் கொள்ள முடியும். மக்களாணை ஏதுவாக இருந்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம் என்றார்.