“கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நான்…” – ராஜ்ய சபா சீட் குறித்து வைகோ பதில்

13 0

“திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

நெல்லை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கு நிகழ்வு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மதிமுக துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவரிடம் நெல்லை மண்டல மதிமுக சார்பில் ரூ. 2 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது .

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, ”வைகோ நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்டார், அவரால் நடக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர். அதை முறியடிக்கவே திருச்சி மலைக்கோட்டையிலிருந்து மதுரை வரை 180 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்டேன்.

நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறேன், உண்ணாவிரதம், மறியல், நடைப்பயணம் என பல போராட்டங்களை முன்னெடுத்து உள்ளேன்

13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகமே காரணம். விடுதலைப் புலிகள் மீது பழிபோட முயன்ற காவல் துறையின் சதி முறியடிக்கப்பட்டது. தற்போது வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், “காப்பர் கிரீன்” (Copper Green) என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறார்.