பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் யார் யார் எங்கு அமர வேண்டும் என்பது பற்றிய நெறிமுறையை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (20) நடைபெற்ற பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த, சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் ஆசனத்துக்கு சண்டையிட்டதாக கூறுகின்றார். ஆனால் உண்மையாக அங்கு நடந்த விடயம் அதுவல்ல. எனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழு தலைவரின் முகம் எனக்கு தெரியாது. ஆகையாலேயே ஆசனத்தை மாற்றி தருமாறு கூறினேன். பிரதேசத்தின் முதற் குடிமகன் தவிசாளரே.
சுற்றுநிருபத்தின்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்த பிரதேசத்தின் தவிசாளர் ஆகியோரே முன்னால் அமர வேண்டும். இந்த நடைமுறை சிங்கள இடங்களில் உள்ளன. ஆனால் தமிழர் பகுதிகளில் அது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கவில்லை. தமிழ் கட்சிகளின் ஆட்சியே காணப்படுகின்றது.
பிரச்சினை எழுந்தவுடன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எனக்கான ஆசனத்தை தனக்கு அருகே வழங்கினார். அவர் வழங்கியதால் நானும் அங்கு சென்று அமர்ந்தேன். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னை அவ்விடத்தில் இருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிடுகின்றார். அதனை கேட்டு பொலிஸாரும் பாய்ந்து எழும்பி வருகின்றார்கள். பொலிஸார் எழுப்பி வருகின்றார்கள் என்றால் நான் யாருக்காவது அடிக்க போனேனா அங்கு?
அன்றையதினமே சிறிது நேரத்தின் பின்னர் பொலிஸாருக்கு உத்தரவிட்டது குறித்து அர்ச்சுனாவை கேட்டிருந்தால் அவர் கூறியிருப்பார் அப்படி நான் எதுவும் செய்யவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. அவர் காலை ஒரு கதை கதைப்பார், மாலை ஒரு கதை கதைப்பார், அடுத்த நாள் ஒரு கதை கதைப்பார். அது அவரது பழக்கதோசம்.
அன்று நடைபெற்ற சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் பல கேள்விகளை கேட்டேன். அத்தனை கேள்விகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜாவை காப்பாற்றினார்.

