தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் 125.5% அதிகரிப்பு: பாஜக குற்றச்சாட்டு

13 0

தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் 125.5 சதவீதம் அதிகரித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மாநில பாஜகவின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று சட்டப்பேரவையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு, ‘மணிப்பூரைப் பார், மத்திய அரசின் தரவைப் பார்’ என்று வாய்ச்சவடால் விட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் தனது அரசின் காவல் துறை வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பை உற்றுப் பார்க்க வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தங்களது தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்தான், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59.7 சதவீதமாக உயர்ந்து, பெண்கள் நடமாட்டத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி, குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும் 125.5 சதவீதமாக அதிகரித்து பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பையும் காவு வாங்கியுள்ளது.

இந்த லட்சணத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என மேடையில் நாடகமாடுவது, இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் என சட்டப்பேரவையில் மார்தட்டுவது வேண்டாம். தமிழகப் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுகளவும் அக்கறையின்றி திசை திருப்புவதில் மட்டுமே குறியாக இருக்கும் உங்களது போலி முகத்திரை வரும் தேர்தலில் கிழித்தெறியப்படும். தமிழகப் பெண்களின் வாழ்வு காக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.