சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலைக்கழகம்

11 0

வவுனியா பல்கலைக்கழகமானது ‘தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும்’ என்ற கருப்பொருளின் கீழ் 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தின் சார்பில் இம்மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப மற்றும் முயற்சியாண்மை மாநாடு (ITAM–32) நடைபெறவுள்ளது.

அந்த வகையில் வவுனியா பல்கலைக்கழகம் இலங்கையில் விரைவாக வளர்ந்து வரும் ஒரு அரச பல்கலைக்கழகமாகும்.

இது கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி புதுமை மற்றும் பிராந்திய முன்னேற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குவதில் உறுதியாக செயற்பட்டு வருகிறது.

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம், உயர் கல்வி அணுகலை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி பண்பாட்டை ஊக்குவித்தல் தொழில் துறையுடனும் சமூகத்துடனும் உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் இப்பல்கலைக்கழகம் புதுமை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், சர்வதேச ITAM அமைப்பு, பல்கலைக்கழக தொழில் இணைப்பு (UBL) மற்றும் சர்வதேச விவகாரமையம் (CIA) ஆகியவற்றுடன் இணைந்து ITAM–32 மாநாட்டை வவுனியா பல்கலைக்கழகத்தில் நடாத்த முன்வந்துள்ளது.

ITAM மாநாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஒரு கல்வி மேடையாகும். பல ஆண்டுகளாக இது பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் முனைவோர், தொழில் துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது.

ITAM மாநாடு பின்வரும் விடயங்களுக்கு ஒரு மேடையாக செயல்படுகிறது. முன்னோடியான ஆராய்ச்சிகளைப் பகிர்வு செய்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பப் போக்குகளைப் பற்றி கலந்துரையாடல், சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தல், பல்கலைக்கழகம் மற்றும் தொழில் துறை நிலைத்த கூட்டாண்மைகளை உருவாக்கல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் வவுனியா பல்கலைக்கழகம் உலகளாவிய கல்வித் திறனின் வலையமைப்பில் பெருமையுடன் இணைகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மாநாடானது தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தலைப்பு இன்றைய வேகமாக மாறிவரும் உலகச் சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், தானியங்கி முறைமை, மற்றும் புதுமை சார்ந்த பொருளாதாரங்கள் உலகத்தை மாற்றிவருகின்ற இன்றைய சூழலில் இந்த தலைப்பு பொருத்தமானதாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநாடு பின்வரும் முக்கிய கேள்விகளை ஆய்வு செய்ய முற்படுகிறது. தொழில்நுட்பமானது தொழில் முனைவினை எவ்வாறு முன்னெடுக்க முடியும், புதிய கண்டுபிடிப்புகள் எவ்வாறு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும், தொழில்நுட்ப முன்னேற்றம் மனித மையப்படுத்தப்பட்டதாக இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது, எதிர்கால பொருளாதாரத்தை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களின் பங்கு என்ன உட்பட பல்வேறு விடயங்களை ஆய்வுசெய்கிறது, இந்தத் தலைப்புக்கள் இலங்கையின் தேசிய முன்னுரிமைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

மாநாட்டுக்கு முந்தைய முக்கிய உரையினை “ஆசியாவின் எதிர்காலம்” என்ற தலைப்பில் தேர்ச்சி பெற்ற சர்வதேச அறிஞர் குழாமின் பங்களிப்புடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவிருக்கின்றனர். இதில் ஆசியாவின் பொருளாதார மாற்றம், டிஜிட்டல் முன்னணி நிலை மற்றும் உலகளாவிய பங்கு ஆகியவை ஆராயப்படும்.

அத்துடன் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அமர்வுகள் மற்றும் கல்வி –தொழில் இணைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு டிஜிட்டல் வணிகம் மற்றும் மின்னணு வாணிபம் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவு நிலையான முகாமைத்துவ நடைமுறைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நுண்ணறிவு முறைமைகள் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்தவுள்ளது.

இம்மாநாட்டில் தென்கொரியா, இந்தியா, நேபாளம், சீனா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கணிசமான சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பங்கேற்பு இலங்கையின் உலகளாவிய கல்வித் தெரிவு நிலையை மேம்படுத்தும் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்தும், ஆராய்ச்சி பரிமாற்றத்தை மேம்படுத்தும், பிராந்திய பொருளாதாரச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும், அறிவு பரிமாற்றத்துக்கும் புதுமைக்கும் பங்களிக்கும்.

வவுனியாவில் இத்தகைய சர்வதேச மாநாட்டை நடத்துவது, வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வித் திறன் மற்றும் உலகளாவிய ஈடுபாட்டை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

வவுனியா பல்கலைக்கழகம் (ITAM–32)இம்மாநாட்டை நடத்துவதில் பெருமை கொள்கிறது. இம்மாநாடு ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புதுமை சூழல் மற்றும் பிராந்திய முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த மாநாடு வெறும் கல்வி நிகழ்வாக மட்டுமல்ல. இது இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை, தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவினை ஊக்குவிப்பதை, ஆரம்பநிலை நிறுவனம் மற்றும் சூழலை வலுப்படுத்தலை, இளைஞர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சந்தர்ப்பங்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதை இலங்கையை பிராந்திய அறிவு மையமாக நிலைநிறுத்துவதையும் பிரதிபலிக்கிறது.

இது தொழில்முனைவு மற்றும் மனிதகுலத்தை இணைக்கும் ஒரு பொறுப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை வடிவமைக்கும் மேடையாக இது விளங்கும்.

வடக்கு மாகாணத்தில் இம்மாநாட்டை நடத்துவது, தேசிய முன்னேற்றத்தையும் உயர் கல்வி மையங்களின் பிராந்திய பரவலையும் வலியுறுத்துகிறது. எனவே இம்மாநாட்டில் ஊடக நிறுவனங்கள், தொழில் துறை கூட்டாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்தார்.