2030 இல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதத்தால் அதிகரிக்கும்

6 0

இலங்கையில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் வருடாந்தம் பதிவாகும் புதிய புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும், இந்த அபாயகரமான நிலையை எதிர்கொள்வதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.

புற்றுநோயைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் பி,ஈ.டி ஸ்கேன் பரிசோதனைகளுக்கு அவசியமான கதிரியக்க மருந்தை இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் முதலாவது ஆய்வுக்கூடம் திங்கட்டகிழமை (16)  உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய முதலீட்டு ஊக்குவிப்பு வலய வளாகத்தில் இந்த ‘சைக்ளோட்ரான்’ அடிப்படையிலான கதிரியக்க மருந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இதுவரை காலமும் பி.ஈ.டி ஸ்கேகன் பரிசோதனைக்கான  எப்.டி.ஜி  என்னும் மருந்தினைஇந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இந்த மருந்தானது உற்பத்தியில் இருந்து பயன்பாடு வரை மிகவும் சிக்கலான செயல்முறையைக் கொண்டது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் போது, அதன் கதிரியக்கத் தன்மை சுமார் 97 சதவீதம் வரை குறைவடைகின்றது.

இதனால் பி.ஈ.டி ஸ்கேன் பரிசோதனைகளின் துல்லியத்தன்மையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இனிமேல் உள்நாட்டிலேயே இதனை உற்பத்தி செய்வதன் மூலம் துல்லியமான முடிவுகளைப் பெற முடிவதுடன், பாரியளவு வெளிநாட்டுச் செலாவணியையும் நாட்டுக்குச் சேமிக்க முடியும்  என்றார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இங்கு உரையாற்றுகையில்,

இந்த மருந்தினை தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதில் கடந்த காலங்களில் சில தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும், அமைச்சின் முறையான முகாமைத்துவத்தால்  சீரமைக்கப்பட்டுள்ளது.  அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து இவ்வாறான பாரிய திட்டங்களை முன்னெடுப்பது நாட்டின் இலவச சுகாதாரச் சேவையை வலுப்படுத்த அத்தியாவசியமானது. . இந்த உற்பத்தி நிலையத்தின் மூலம் புற்றுநோய் கண்டறியும் சோதனைகளை எவ்வித தாமதமுமின்றி மிக வேகமாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது  என்றார்.