தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள “பிரஜா சக்தி” என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபையும் ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வேலணை பிரதேசத்தின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (18) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் சபையின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறைகளும் எட்டப்பட்டன.
இந்நிலையில் உறுப்பினர் செல்லப்பா பார்த்தீபனால் பிரஜா சக்தி திட்டம் தொடர்பில் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டது.
இதன்போது உறுப்பினர்கள் குறித்த திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை இந்த திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும், “பிரஜா சக்தி” திட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான ஏற்பாடாக இருக்கவில்லை.
மேலும் ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், அதிகார மோசடிகள் இடம்பெறாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முழுமையாக அத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறான கட்டமைப்பு அரச அதிகாரிகளை மட்டுமல்லாது மக்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டதுடன், பிரதேச சபையின் அதிகாரங்களை இல்லாது நீர்த்துப்போகச் செய்ய முற்படும் இந்த திட்டம் வேலணை பிரதேச சபைக்குள் செயற்பட பிரதேச சபை ஒத்துழைப்பை வழங்காது.
அத்துடன் அவ்வாறான கட்டமைப்பின் திணிப்பு சபையின் ஆளுகைக்குள் வருவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது எனவும் வலியுறுத்தி அவ்விடயத்தை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.
குறித்த பிரேரணைக்கு சபையின் மொத்த 22 உறுப்பினர்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நால்வர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

