அக்குரேகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சகோதரர்களான இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றைய சந்தேகநபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை (18) கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலங்கம – அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, சம்பவம் குறித்து விசாரிக்க 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அதற்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, கடந்த 16ஆம் திகதி மதியம் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை கொண்டு சென்ற இரண்டு சகோதரர்களை கொட்டாவையில் கைது செய்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொல்கஸ்ஸோவிட்ட பகுதியைச் சேர்ந்த ‘டிலா’ என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களும், அவரது அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாகவும், ‘டிலா’வும் இந்தச் செயலில் பங்கேற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

