சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் படுகொலையானது, ஏற்கனவே தொடர்ச்சியான கொலைகளால் பலவீனமடைந்துள்ள சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் பாரிய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் கையாளப்படும் விதம் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்தாலோசித்து பொருத்தமான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.16ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, ஆசியாவின் பழமையான மேற்குலகை அடிப்படையாகக் கொண்ட சட்ட அமைப்பின் ஒருமைப்பாட்டை நேரடியாகப் பாதிக்கிறது. ஏற்கனவே பல கொலைகளால் அதிர்ந்து போயுள்ள சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் இது பெரும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்கக் கண்டத்தில் சட்டத்தரணிகள் படுகொலை செய்யப்படுதல் மற்றும் தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்கள் காரணமாக மெக்சிகோவின் ஒரு மாவட்டத்தில் 70 சதவீத சட்ட அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஈக்வடாரில் ஒரு அரச தரப்பு சட்டத்தரணியும், போர்ட்-ஓ-பிரின்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தல் கும்பல்களுக்காக ஆஜராகும் பல சட்டத்தரணிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டத்தரணிகளுக்கு பாரிய உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என அச்சுறுத்தப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் பொலிஸ் உதவியைப் பெறுமாறு பிரிட்டிஷ் கொலம்பிய சட்டச் சங்கம் சமீபத்தில் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி அறிவிப்புகளை வெளியிட்டது.
இலங்கையில் இந்த படுகொலையானது, ஒரு சட்டத்தரணிக்கும் பொலிஸ் அதிகாரிக்கும் இடையிலான தகராறில் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாக பக்கச்சார்பான நடவடிக்கைகளை எடுத்ததன் பின்னணியில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள், எவ்வித விசாரணையும் இன்றி, இந்த துப்பாக்கிச் சூடு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில் கடுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்ட பொலிஸார், விசாரணைகளை நடத்தும் திறன் அல்லது விருப்பம் குறித்து இது கேள்வியை எழுப்புகிறது. மேலும், கடந்த ஆண்டும் இது போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிகரித்து வரும் வன்முறையைத் தடுப்பதில் பொறுப்பான அமைச்சர் தவறியுள்ளார். தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அரசியல்மயமாக்கலின் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால், அவர்கள் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவார்கள் என்று நம்ப முடியாது.
இந்த சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பல தீர்மானமிக்க நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது. அதற்கமைய இந்த படுகொலைகள் உட்பட சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும். சட்டத்தரணிகள் குழாமின் தலைவர் என்ற ரீதியில், சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி இந்த விடயத்தை விசாரிக்க பொருத்தமான பொலிஸ் குழுவை நியமிக்க வேண்டும். அதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இணக்கப்பாட்டையும் பெற வேண்டும்.
லக்ஸம்பேர்க் உடன்படிக்கையின் 9.4 பிரிவு மற்றும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பிற்கான ஐரோப்பிய பேரவையின் உடன்படிக்கையின் 9.4 பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நிர்வாக மற்றும் தேவையான சட்டவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொதுநலவாய சங்கம், ‘சட்டத்தரணி பாதுகாக்கப்படாவிட்டால் யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்’ என்று கூறி மேற்கண்ட உடன்படிக்கையை அங்கீகரித்தது. சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தரணிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கும்.

