சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி தம்பதி கொலையானது நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில், மிகவும் பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பிலுள்ள ஓட்டையை வெளிப்படுத்துகிறது. குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்டங்கள் ஏற்கனவே உள்ளன, ஆனால் அவற்றைச் சரியாகச் செயல்படுத்தும் பொறிமுறை அரசிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சட்ட செயலாளர் ரஜித லக்மால் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தக் கொலை இடம்பெற்று மிகக் குறுகிய காலத்துக்குள் குறித்த வைத்தியர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சட்டத்தரணியின் கொலையின் பின்னர் பொறுப்பு கூற வேண்டியவர்கள், மிகவும் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர். சட்டத்தரணிகள் என்பது இந்நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாகும். நாம் அரசியலமைப்பை பாதுகாப்பதாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருமித்த முடிவெடுத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சட்டத்தரணி மல்லவாரச்சி மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் படுகொலை நடந்த இடம் இராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகாமையிலும், ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலும் உள்ளது. இவ்வளவு பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இச்சம்பவம் நடந்தது நாட்டின் பாதுகாப்பிலுள்ள ஓட்டையை வெளிப்படுத்துகிறது.
இங்கு அவரசர கால சட்டம் நடைமுறையிலிருப்பதும் அவதானிக்கத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி மீது ஒரு சில மணிநேரங்களிலேயே திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டன.
சட்டத்தரணிகளை ‘பாதாள உலகத்தினரின் சட்டத்தரணிகள்’ என்று முத்திரை குத்துவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசியலமைப்பின் படி, ஒவ்வொரு பிரஜைக்கும் சட்ட உதவியைப் பெற உரிமையுண்டு.
அதை வழங்குவதே ஒரு சட்டத்தரணியின் கடமையாகும். தற்போதைய அரசாங்கம் ‘தேசிய பாதுகாப்பு’ பற்றிப் பேசினாலும், நடைமுறையில் ஒரு சட்டத்தரணி கூட வீதியில் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலைமையே காணப்படுகிறது.
குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்டங்கள் ஏற்கனவே உள்ளன, ஆனால் அவற்றைச் சரியாகச் செயல்படுத்தும் பொறிமுறை அரசிடம் இல்லை. அண்மைக் காலமாக சட்ட கட்டமைப்பிற்குள்ளேயே பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, சட்டத்தரணியொருவரை தாக்க முற்பட்டமை என பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சட்டத்தரணிகள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில்லை, மாறாக ஒரு நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்கின்றனர். நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபதி தண்டிக்கப்படக்கூடாது’ என்ற சட்டக் கோட்பாட்டை நாம் வலியுறுத்துகின்றோம்.
அரசாங்கம் வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல், குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் செயல்திறன் இல்லை. சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அரசாங்கம் தவறிவிட்டது என்பதே யதார்த்தமான உண்மையாகும் என்றார்.

