’’குஷ்’’ போதைப்பொருளுடன் மூவர் கைது

11 0

சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான “குஷ்” போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும், 35 வயதுடைய பெண்ணொருவரும் ஆவர். இவர்களில் ஒருவர் குறித்த பகுதியில் “ஸ்பா” மசாஜ் நிலையமொன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து குறித்த “குஷ்” போதைப்பொருள் கையிருப்பைக் கொள்வனவு செய்து கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அதில் 60 பொதிகளாகப் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோகிராம் 400 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.