‘‘எங்களுக்கும் திமுகவுக்கும்தான் மோதல். தவெக தலைவர் விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கையெடுத்து கும்பிட்டார்.
மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஒய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கு பணிக் கொடைகள் வழங்குவதற்கு, தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு, சம வேலைக்கு சம ஊதியத்துக்கு, செவிலியர் பணி நிரந்தரத்துக்கு, புதிய ஆசியர்கள் நியமனம், பழைய ஒய்வூதிய திட்டத்துக்கு, கல்வி கடன் தள்ளுபடி செய்வதற்கு காசு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
இப்படி யார் கேட்டாலும் காசு இல்லை என்று கைவிரித்த இந்த அரசு தற்போது தோல்வி பயத்தால் தேர்தல் ஆதாயத்துக்காக ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையை வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி பார்த்து வழங்காமல் 2 கோடியே 25 லட்சம் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதாக அதிமுக அறிவித்தது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுக கூட்டணியை ஆட்டம் காண வைத்துவிட்டது. முதல்வரை தூங்க விடவில்லை. அதனால்தான் ரூ.5 ஆயிரம் உரிமைத் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார். திமுக தங்க கட்டிகளாக கொடுத்தாலும் கூட விலைவாசி உயர்வால் கொதித்துப் போய் உள்ள மக்கள், அவர்களுக்கு வாக்களிக்க தயாரில்லை.
போதைப்பொருள் நடமாட்டால் தங்கள் தலைமுறையையே இந்த ஆட்சி கெடுத்துவிட்டது என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முதலமைச்சரை யாரோ தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தெலங்கானாவில் சந்திரே சேகர ராவ், 2023-ம் ஆண்டு குடும்ப அட்டைகளுக்கு இதுபோல், ரூ.7 ஆயிரத்து 500 வழங்கியுள்ளார். கடைசியில் அவர் தோல்வியடைந்துவிட்டார். நிறைய இடங்களில் அக்கட்சி டெபாசிட் இழந்துவிட்டது. ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, குடும்ப அட்டைகளுக்கு ரூ.5 ஆயிரம் அறிவித்தார். ஆனால், அவரால் எதிர்கட்சியாக கூட வர முடியவில்லை.
மக்களை பணத்தை வைத்து விலைக்கு வாங்க முடியாது. நான்கரை ஆண்டு காலம், திமுக அரசு எதுவும் செய்யாமல், கடைசியில் செய்வதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு பயிற்சி வழங்குவார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோடைக் கால சிறப்பு நிதி என்று முதல்வர் ரூ.2 ஆயிரம் கொடுத்தது, நகைச்சுவையாகிவிட்டது. முதல்வரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்.

