சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் (73) வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்தால் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தெஹ்ரீக் இ–இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி, 2018 பொதுத் தேர்தலில் வென்று, பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் பதவியேற்றார். கூட்டணிக் கட்சிகள் விலகியதால், 2022 ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
பின்னர் அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில் இம்ரான் கானின் வலது கண்ணில் சிஆர்விஓ என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி யஹ்யா அப்ரிடி, நீதிபதி ஷாகித் பிலால் ஹுசைன் அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. “இம்ரான் கானின் கண் பார்வையை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும்.
பிப்ரவரி 16-ம் தேதிக்குள் அவருக்கு பரிசோதனை செய்து முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பேச தொலைபேசி வசதியை சிறை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்படுவோம்” என்று தெரிவித்தன.

