தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 4.5 பில்லியன் ரூபா நிதி

9 0

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நிவாரணங்கள் வழங்குவதற்காக 25 மாவட்டங்களுக்கும் 4.5 பில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே.டி. தர்மதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தித்வா புயலால் 22 மாவட்டங்களில் 703,922 குடும்பங்களைச் சேர்ந்த 24 இலட்சத்து 87,114 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 676 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

155 பேர் காணாமல் போயுள்ளனர். 6,198 வீடுகள் முழுமையாகவும், ஒரு இலட்சத்து 12,638 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. தற்போது பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் 50 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,373 குடும்பங்களைச் சேர்ந்த 4,175 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணங்கள் வழங்குவதற்காக 25 மாவட்டங்களுக்கும் 4.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் நிர்மாணப்பணிகளுக்காக 41.6 பில்லியன் ரூபா சகல மாவட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்ற வேலைத்திட்டத்துக்காக 2.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதன் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் வாராந்தம் அறிக்கை பெறப்படுகின்றது.

அந்த அறிக்கைக்கமைய 25 000 ரூபா கொடுப்பனவு இதுவரையில் 98.2 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. 50,000 ரூபா கொடுப்பனவு 81.5 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. 25,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு 4 இலட்சத்து 33,148 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன. அவற்றில் 4 இலட்சத்து 25,372 குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 50,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு ஒரு இலட்சத்து 70 366 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 39,006 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்த 1,254 குடும்பங்கள் அதற்கான கொடுப்பனவைப் பெற தகுதி பெற்றுள்ளன. அதேபோன்று வாடகை வீடுகளுக்காக 8,998 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 1,018 குடும்பங்கள் வாடகை வீடுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு 203 354 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 48,000 மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீள் புனரமைப்பதற்கான கொடுப்பனவு 201 வீடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. காணி உள்ளிட்ட பிரச்சினைகளால் இதில் சற்று தாமதம் நிலவுகிறது. 1,668 பேருக்கு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக 108 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 265 பேருக்கு தமது குடும்பத்தவர்கள் அல்லது உறவினர்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.