தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையிலான பல அதிரடித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் சமாதான நீதிவானுமாகிய ஸ்ரீகாந்த் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையினது வரவு – செலவு திட்டம் தொடர்பாக நேற்று (12) எமது ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு மாணவர்களுக்கான உணவு மானியம் உயர்வு மற்றும் பொதுமக்களுக்கான மயான வரி நீக்கம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் நிதி நிலைக்குழுவின் விசேட அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளைத் தற்போது செயலில் காட்டியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும் அத்தியாவசிய பொதுச் சேவைகளில் நிலவும் கட்டணச் சுமைகளைக் குறைப்பதுமே எமது பிரதான இலக்காக இருந்தது.
இதன்படி மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு 30000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிப்படுத்தும் ஆசிரியர்களுக்கு கௌரவமான ஊதியத்தை வழங்கும் நோக்கில் இந்த 10000 ரூபா உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 ரூபா மதிய உணவு மானியம் தற்போது 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கியமாக கொழும்பு மாநகர எல்லைக்குள் நிரந்தரமாக வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்த மயானக் கட்டணங்கள் மற்றும் தகனம் செய்வதற்கான கட்டணங்களை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரணத்தின் போது கூட மக்கள் பண நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.
உட்கட்டமைப்பு ரீதியாக பாமன்கடை ஈஸ்ட்ரி வீதி விரிவாக்கம் சுலைமான் அவென்யு வடிகால் புனரமைப்பு மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 15000 ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களும் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளன. மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் வீணடிக்கவில்லை என்பதையே இந்தத் திட்டங்கள் பறைசாற்றுகின்றன.
மாநகர சபையின் விசேட ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கொழும்பு 08 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுக் கட்டிடங்களைப் புனரமைத்தல் மற்றும் மாநகர சபை சொத்துக்களுக்கான பாதுகாப்புச் சேவைகளை வலுப்படுத்துதல் போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் மாதங்களில் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவு

